ரயில் பயணிகள் வசதி மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ரயில்களின் வேகத்தை ரயில்வே துறை மாற்றியமைக்கிறது. இந்த திட்டம், இன்று துவங்கி செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட உள்ளது. இதன் மூலம், 23 ரயில்களின் நேரத்தை மாற்றவும், வேகத்தை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், விசாகப்பட்டினம் - கொல்லம் வாராந்திர எக்ஸ்பிரஸ், கோட்டயம் - கொல்லம், மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா சூப்பர் பாஸ்ட், புதுடில்லி - திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ், திப்ரூகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ், சென்னை- திருவனந்தபுரம் உள்ளிட்ட 23 ரயில்களின் இயக்க நேரம், வேகம் மாற்றப்படுகிறது.
சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'இந்த ரயில்கள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள, சென்று சேரும் நேரத்தை விட 5 - 15 நிமிடங்கள், சில ரயில்கள் அரை மணி நேரம் முன்னதாக இனி சென்றடையும். 'அதற்கேற்ப அடுத்தடுத்த ஸ்டேஷன்களுக்கு ரயில் பயணிக்கும், நின்று செல்லும் நேரம் மாற்றப்படுகிறது மேலும் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது' என்றனர்.














