2,400 தற்காலிக செவிலியர்களும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்ததால் ஒப்பந்த அடிப்படையில், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் செவிலியர்களை தேர்வு செய்தது. மொத்தம் 2,400 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் பணிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இனி பதவி நீட்டிப்பு இல்லை என்று கூறப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், 2,400 செவிலியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த விவகாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து சென்றோம். அவரது ஆலோசனையின் அடிப்படையில், அவர்களை துறை பணியில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவைக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். சம்பளத்தை பொறுத்தவரை என்.எச்.எம். விதிமுறைப்படி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.