நாட்டில் முதல்முறையாக ரூ.25 கோடியில் நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது.
இது தொடர்பாக வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், நீலகிரி வரையாடு, மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரித்தான சிறப்புகளில் ஒன்றாகும். வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும், நாட்டிலேயே முதல்முறையாக 'நீலகிரி வரையாடு திட்டம்' ரூ.25.14 கோடியில் செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீலகிரி வரையாடு இனம், இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தால் அழிந்து வரும் உயிரினம் என்று வகைப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. 3,122 வரையாடுகள் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் மூலம், அவற்றின் உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்பட்டு அவற்றுக்குரிய வாழ்விடங்களில் இந்த இனங்கள் மீள் அறிமுகம் செய்யப்பட்டு, வாழ ஏதுவான சூழல் உருவாக்கப்படும். மேலும், அவற்றின் எண்ணிக்கை பெருகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.