தமிழக அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 254 ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்ததில் உபரியாக கண்டறியப்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிக்கல்வி பொதுத்தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டன.
பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் கோரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் இருந்து கருத்துருகள் பெறப்பட்டன. இதையடுத்து பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்ட 254 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை மீண்டும் தேவையுள்ள பள்ளிகளுக்கு வழங்க முடிவாகியுள்ளது.
அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு, வணிகவியல், பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளில் கூடுதலாக 254 முதுநிலைபட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.