சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உலகத்தரம் வாய்ந்த 28 மைதானங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் தற்போது 210 விளையாட்டு திடல்கள், 96 உடற்பயிற்சி கூடங்கள், 4 இறகு பந்து உள்விளையாட்டரங்கம், 2 நீச்சல் குளங்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் 14க்கும் மேற்பட்ட விளையாட்டு திடல்களில் கால்பந்து, டென்னிஸ், கைபந்து, பூ பந்து , கூடை பந்து போன்ற மைதானங்கள் அமைக்கப்பட்டு நட்சத்திர விளையாட்டு திடல்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
இதனை தினசரி 50 முதல் 100 வரையிலான நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் உலகத்தரத்தில் புதிதாக 28 விளையாட்டு மைதானங்கள் அமைக்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்துள்ளது. அதற்காக ரூ.29.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 10 மைதானங்கள் முதல் கட்டமாக அமைக்கப்படும் என்றும் இந்த விளையாட்டு மைதானங்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இந்த விளையாட்டு மைதானங்களின் தோற்றமானது உலகத் தரத்தில் இருக்கும். குறிப்பாக மைதானங்களை சுற்றி சுவர்கள், அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் மற்றும் புல்வெளிகள் இருக்கும்.
மேலும் 24 மணி நேரமும் தண்ணீர் வசதி, யுனிசெக்ஸ் கழிப்பறைகள், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க இடம், மைதானங்களை சுற்றி மரம் என மைதாங்களின் தோற்றம் வியக்க வைக்கும். இதன் மூலம் இளைஞர்கள் விளையாட்டு துறையில் அடுத்தகட்ட இடத்திற்கு செல்வார்கள் என்று அவர்கள் கூறினர்.