கடந்த புதன்கிழமை தொலைத்தொடர்பு மசோதா 2023 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, தொலைத்தொடர்புத் துறை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா, மாநிலங்களவையில் இந்த மசோதாவை அறிமுகம் செய்தார். இந்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற நிலையில், குரல் வாக்கெடுப்பின் மூலம் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு மசோதா 2023 ல் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: போலி ஆவணங்கள் சமர்பித்து சிம் கார்டு வாங்கினால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை; ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. தொலைபேசி எண் மூலம் மோசடியில் ஈடுபடுபவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. சிம்பாக்ஸ் மூலம் தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்தினால், மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.