உத்தரகாண்டில் அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
உத்தரகாண்டில் அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு கவர்னர் குர்மித் சிங் தற்போது அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த மசோதா குறித்து ஏற்கனவே சட்டசபையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், 'பிற மாநில பெண்களை விட உத்தரகாண்டில் பெண்களின் நிலைமை மோசமாக இருக்கிறது. இந்த இடஒதுக்கீடு மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். சமூக நீதி மற்றும் பாலின சமத்துவம் போன்றவை உறுதி செய்யப்படும்' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.














