இந்திய மருந்து நிறுவனங்கள் தயாரித்த இருமல் மருந்துகளை உட்கொண்டதால், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை, 300 குழந்தைகள் இறந்துள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. உலகின் 3 நாடுகளில் உள்ள குழந்தைகள் இதனால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தவறான மருந்துகளை உற்பத்தி செய்தது தொடர்பாக, இந்திய மருந்து நிறுவனங்கள் மற்றும் மருந்து உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “குழந்தைகளுக்கு கொடுப்பதற்கான தகுதியில் மருந்துகள் உள்ளனவா என்பதை சுகாதார மையம் ஆய்வு செய்து வருகிறது. மேலும், இது போன்ற இறப்புகள் நேர்வதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது” என்று கூறினார்.
அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி, அதிக அளவில் டை எத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் போன்ற பொருட்கள் இந்திய இருமல் மருந்துகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள, இந்திய அரசு, தனியாக விசாரணைக் குழு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.














