உத்தரகண்டின் ஜோஷிமத்தில் 4 ஆயிரம் பேர் வெளியேற்றபட்டுள்ளனர்.
உத்தரகண்டின் சமோலி மாவட்டம் ஜோஷிமத் நகரில் உள்ள வீடுகள் உட்பட பல கட்டடங்களில் கடந்த சில வாரங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. சாலை உள்ளிட்ட இடங்களில் பூமி வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் ஜோஷிமத் நகரம் மண்ணுக்குள் புதையும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜோஷிமத் பகுதியை நிலச்சரிவு மண்டலமாக அறிவித்த அரசு அங்குள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், முதற்கட்டமாக 4000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பாதிப்பு குறித்த கணக்கெடுக்கும் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இங்கு 30 சதவீதம் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக நிபுணர் குழுவால் அறிக்கைத் தயாரிக்கப்பட்டு பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார்.