பாகிஸ்தானில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து துறைமுகத்தில் இறக்குமதியான பொருட்கள் 400 கன்டெய்னர்களில் தேங்கியுள்ளன.
பாகிஸ்தான் நாட்டில் சீனா, எகிப்து, தாய்லாந்து மற்றும் பிற நாடுகளில் இருந்து உள்நாட்டுக்கு தேவையான உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனினும், கடந்த 3 நாட்களாக கராச்சி துறைமுகத்தில் வெளிநாட்டு இறக்குமதி பொருட்களான வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு உள்ளிட்ட பொருட்கள் தேங்கியுள்ளன. பாகிஸ்தானில் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையாக உள்ளது. இதனால், கராச்சி துறைமுகத்தின் பல்வேறு முனையங்களில் இறக்குமதி செய்யப்பட்ட காய்கறி உள்ளிட்டவை தேங்கி இருக்கின்றன. இவற்றின் மதிப்பு ரூ.44.47 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இறக்குமதி பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் ஏற்படும் காலதாமதம் அவற்றின் தினசரி விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதுடன், துறைமுக முனைய கட்டணம், இறக்குமதி கட்டணம் மற்றும் கன்டெய்னர்களுக்கான விலை உள்ளிட்டவையும் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.