ஆந்திராவில் இருந்து ரெயிலில் சிறுவர்களை கடத்தி செல்வதாக வாரங்கல் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வாராங்கல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் குழந்தைகள் நல குழுவினர் அந்த வழியாக வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது 7 பெட்டிகளில் தனித்தனியாக சிறுவர்களை கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ரெயில் பெட்டிகளில் இருந்த 42 சிறுவர்களை மீட்டனர். இது தொடர்பாக 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் ஆந்திராவில் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறுவர்களை வேலைக்காக மும்பை, செகந்திராபாத்திற்கு அழைத்து செல்வதாக தெரிவித்தனர். மீட்கப்பட்ட சிறுவர்களில் 13 பேரின் முகவரி கண்டு பிடிக்கப்பட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனர். விரைவில் காப்பகத்தில் உள்ள சிறுவர்கள் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என குழந்தைகள் நல அலுவலர்கள் தெரிவித்தனர். சிறுவர்களை பெற்றோர் அனுமதியுடன் வேலைக்கு அழைத்து சென்றார்களா அல்லது கடத்தப்பட்டார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.