கர்நாடகாவில் இருந்து கடந்த 4 மாதங்களில் தமிழகத்திற்கு 450 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டதாக அம்மாநில நீர்ப்பாசன துறை அமைச்சர் கோவிந்தகார்ஜோள் தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூருவில் நேற்று அவர் அளித்த பேட்டியில், கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வருவதால் வறட்சி முழுமையாக நீங்கியுள்ளது. நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நதியோரங்களில் உள்ள 17 ஆயிரம் ஏரிகளில் நீர் நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நல்ல மழை காரணமாக நிலத்தடி நீர் மட்டம் 50 முதல் 65 சதவீதம் உயர்ந்துள்ளது.
பெரிய நீர்ப்பாசன துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 4,502 ஏரிகளில் 1,298 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. மற்ற 3,204 ஏரிகளை நிரப்பும் பணி நடக்கிறது. கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதியில் இருந்து இந்தாண்டு 273 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி, ஆண்டுக்கு 177 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்க வேண்டும். கடந்த ஜூன் 1 முதல் நேற்று வரை 450.53 டிஎம்சி தண்ணீர், தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.