கர்நாடகாவில் முதல் முறையாக ராய்ச்சூரை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு 'ஜிகா வைரஸ்' பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு முதன் முறையாக குஜராத்தின் ஆமதாபாத் நகரில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பகல் பொழுதில் ஏடிஸ் வகை கொசுவால் கடிக்கப்படும் மனிதருக்கு இதன் பாதிப்பு தென்படும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர். கர்நாடகாவின் அண்டை மாநிலங்களான கேரளா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், ராய்ச்சூரை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. சிறுமியின் ரத்த மாதிரி மஹாராஷ்டிராவின் புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. ஆய்வறிக்கையில், ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதித்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் ராய்ச்சூர், விஜயநகரா உட்பட சுற்று வட்டார மாவட்டங்களில் 'ஹை அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.














