பெங்களூரில் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் விபத்து காப்பீடு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
பெங்களூரு-கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம், தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு விபத்து காப்பீடு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. சாந்தி நகர் கே.எஸ்.ஆர்.டி.சி., அலுவலகத்தில் தலைவர் சந்திரப்பா முன்னிலையில் நிர்வாக இயக்குனர் அன்பு குமார், வங்கி துணை பொது மேலாளர் பங்கஜ் தப்ளியால் இடையே 'புதிய விபத்து காப்பீடு திட்டம்' நேற்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இத்திட்டம், எஸ்.பி.ஐ., வங்கி ஊதிய கணக்கு வைத்திருக்கும் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கு தனி நபர் விபத்து காப்பீட்டை உள்ளடக்கியது. இந்த தனி நபர் காப்பீடு திட்டத்தின் மூலம், பாலிசிதாரர் விபத்தில் இறந்தால் அவரை சார்ந்தவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை உடனடியாக கிடைக்கும். விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் 20 லட்சம் ரூபாயும்; தற்காலிக ஊனம் ஏற்பட்டால் 10 லட்சம் ரூபாயும் கிடைக்கும். பணியில் இல்லாத போது விபத்தில் பாதிக்கப்பட்டாலும் காப்பீடு வசதி கிடைக்கும்.
அதோடு பிளாஸ்டிக் சர்ஜரிக்கு 10 லட்சம் ரூபாயும்; மருந்துகளுக்கு 5 லட்சம் ரூபாயும்; கோமாவில் இருந்து இறந்தால் 50 லட்சத்துடன் கூடுதலாக 2 லட்சம் ரூபாயும் ; ஏர் ஆம்புலன்ஸ் சேவைக்கு, 10 லட்சம் ரூபாயும்; ஊழியர்களின் குழந்தைகளின் பட்டப்படிப்பு கல்விக்கு 5 லட்சம் ரூபாயும்; ஊழியர் இறந்தால் அவரது மகள் திருமணத்துக்கு 5 லட்சம் ரூபாயும் நிதியுதவி கிடைக்கும் வகையில் இந்த காப்பீட்டில் வசதி செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நிறுவனங்களிலேயே விபத்து காப்பீட்டு திட்டத்தில் இதுவே அதிகபட்ச தொகையாகும்.