விடுமுறை முடிந்து சென்னை திரும்புவதற்காக அரசு பேருந்துகளில் 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் இன்று இரவு புத்தாண்டை கொண்டாடி விட்டு நாளை வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புகிறார்கள். இதனால் பேருந்து , ரெயில்களில் இடங்கள் நிரம்பி விட்டன. குறிப்பாக தென் மாவட்டப் பகுதியில் இருந்து வரும் ரெயில்களில் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டன. இதையடுத்து அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு நாளை 500 சிறப்பு பேருந்துகளும், திங்கட்கிழமை 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
வெளியூர்களில் இருந்து வழக்கமாக சென்னைக்கு 2,100 பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்கள் தேவையைக் கருதி கூடுதலாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.