தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டில் 500 காளைகள் பங்கேற்று 70 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி கிராமத்தில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் சார்பில், தமிழகத்தில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று காலை 8.20 மணிக்கு துவங்கியது. திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டது. 500 காளைகள், 237 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கலெக்டர் கவிதா ராமு உறுதிமொழி வாசிக்க அதனை வீரர்கள் ஏற்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். காலை 8.30 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு பிற்பகல் 2 மணிக்கு முடிந்தது. காளைகள் முட்டியதில் 70 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பைக், கட்டில், மிக்சி, சேர் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.