தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தை மீறினால், சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என வரைவு மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதிய திருத்தங்களுடன் தனிநபர் தகவல் பாதுகாப்பு வரைவு மசோதாவை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் நேற்று வெளியிட்டார். இதில், தனிநபர் தகவல் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய தகவல் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்படும். தகவல் பாதுகாப்பு சட்டங்களை மீறும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். தகவல் மீறல் குறித்து சம்மந்தப்பட்ட நிறுவனம் ஆணையத்திற்கோ, சம்மந்தப்பட்ட தகவல் உரிமையாளருக்கோ தகவல் தெரிவிக்க தவறினால் ரூ.200 கோடி அபராதம் விதிக்கப்படும்.
தனிநபர்களின் தகவல்களை நிறுவனங்கள் பயன்படுத்துவது சட்டப்பூர்வமாகவும், வெளிப்படையானதாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்குத் தேவையான தனிப்பட்ட தகவல்கள் மட்டுமே சேகரிக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.














