அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவை வழங்க, ரிலையன்ஸ் நிறுவனம் 2லட்சம் கோடி முதலீடு
இந்தியாவில், வரும் அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவையை வழங்க, சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக, நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 45 வது வருடாந்திர பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது, அதில், பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில், தீபாவளி பண்டிகைக்குள், ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. மேலும், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கும் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும், சீனா, அமெரிக்காவை விட தகவல் தொடர்பு துறையில், இந்தியாவை முன்னேற்றிச் செல்வதே நிறுவனத்தின் நோக்கம் என்று ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறினார். அத்துடன், இந்த திட்டத்திற்காக சுமார் 2 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாகவும் அறிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ, சுமார் 88078 கோடி ரூபாய் தொகையை முதலீடு செய்து, பிற நிறுவனங்களைக் காட்டிலும் அதிகப்படியான 5ஜி அலைக்கற்றையைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், உலகின் அதிவேக 5ஜி தொலைதொடர்பு சேவையை வழங்கப்படும் என்று வருடாந்திர பொதுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே, இந்தியாவின் 1000 முக்கிய நகரங்களில், 5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான திட்டம் தயாராக உள்ளதாக, நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.