இந்தியாவின் முதல் பணக்காரரான கௌதம் அதானின் தனிப்பட்ட சொத்து மதிப்பு, ஒரே நாளில் 5.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளது. கௌதம் அதானி நிறுவனத்தின் பங்கு மதிப்பு புதன்கிழமை 10% வரை சரிவை சந்தித்தது. இதன் எதிரொலியாக இந்த சொத்து மதிப்பு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய நிலவரப்படி, கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 120.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளதாக ஃபோர்ப்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. சொத்து மதிப்பு குறைந்தாலும், அவர் தொடர்ந்து உலகின் மூன்றாவது பணக்காரராகவே நீடித்து வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதானி குழுமத்தை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்குச்சந்தையில் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக, அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் 9.6% சரிந்து, 450.75 ரூபாய்க்கு வர்த்தகமானது. மேலும், அதானி போர்ட்ஸ், அதானி பவர் மற்றும் அதானி ட்ரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு 5% வரை சரிவை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதானி குழுமம், 20000 கோடி ரூபாய் மதிப்பிலான தனது தொடர் பொதுப் பங்கீட்டை (FPO) குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.