விலையில்லா வேட்டி - சேலைகள் தயாரிக்கும் பணி 60 சதவீதம் நிறைவு பெற்றதாக கைத்தறித்துறை உதவி இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான வேட்டி-சேலைகள் உற்பத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 17,455 தறிகள் மூலமாக 1,26,19,004 வேட்டிகளும், 21,389 தறிகளில் 99,56,683 சேலைகளும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இது குறித்து ஈரோடு கைத்தறித்துறை உதவி இயக்குனர் சரவணன் கூறுகையில், பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி - சேலைகள் உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தின் மொத்த உற்பத்தியில் ஈரோடு சரகத்தில் மட்டும் 80 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 60 சதவீதம் விலையில்லா வேட்டி-சேலைகள் தயாரிக்கும் பணி நிறைவு பெற்றது. மீதமுள்ள வேட்டி, சேலைகள் வருகிற ஜனவரி மாதம் 20-ந் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.