சென்னையில் வாகன ஓட்டிகள் விதிமீறலில் ஈடுபடுவது 60 சதவீதம் குறைந்தது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய அபராத நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.1000மும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் ரூ 17 கோடியே 47 லட்சம் ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி கூறுகையில், போக்குவரத்து விதிகளை மீறினால் அபராத தொகை 5 முதல் 10 மடங்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை தவறாமல் கடைபிடித்து வருகிறார்கள். இதன் காரணமாகவும், போக்குவரத்து போலீசாரின் தொடர் விழிப்புணர்வு காரணமாகவும் போக்குவரத்து விதிமீறல்கள் சென்னையில் 60% குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.