உத்தராகண்ட் மாநிலத்தில் அபாயகரமான கட்டடங்களில் வசிக்கும் 600 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம், சமோனி மாவட்டத்தில் ரிசிகேஷ், பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுற்றுலா நகரம் ஜோஷிமத். இமயமலையின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த நகரத்தில் நிலநடுக்கங்களும், நில சரிவுகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு திடீரென ஜோஷிமத் நகரத்தின் ஒரு பகுதி பூமிக்குள் புதைய தொடங்கியுள்ளது. அங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் பெரும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் எந்நேரத்திலும் அவை இடிந்து விழும் அபாயகரமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் ஜோஷிமத் நகரத்தில் இருந்து 600 குடும்பங்களை உடனடியாக வெளியேற்றுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.