தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்காக இதுவரை 61 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறுகையில், ஆதார் எண் இணைப்பு பணிகள் தொடங்கி 4 மாதம் முடிவுறும் நிலையில், இதுவரை தமிழகத்தில் உள்ள 6.18 கோடி வாக்காளர்களில் 61 சதவீதம் பேர் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக அரியலூரில் 91.4 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 89.03 சதவீதம், தருமபுரியில் 81.62 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளனர். குறைந்தபட்சமாக சென்னையில் 30.4 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மார்ச் 31-ம் தேதி வரை இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி.5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் முடிவடைந்துள்ளன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்த உள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.