வேலூர் மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 6,348 பேருக்கு ரூ.8 கோடி மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் எதிர்பாராத சாலை விபத்துகளினால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சையை விரைவாக வழங்க இன்னுயிர் காப்போம் -நம்மை காப்போம் 48 திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெருக்கடியான காலக்கட்டமான விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் முழுமையான சிகிச்சை வழங்க அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை வழங்குவதை உறுதி செய்கிறது.
வேலூர் மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை சாலை விபத்துகளில் லேசான மற்றும் படுகாயமடைந்த 6,348 பேர் ரூ.8 கோடியே 19 லட்சத்து 48 ஆயிரத்து 217 மதிப்பில் சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.