தமிழகத்திற்கு 7 மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்துடன், நாடு முழுவதும் மேலும் 100 மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசுகளுடன் இணைந்து அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மத்திய அரசின் நிதியுதவியுடன் இதுவரை 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டும் தான் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், அவற்றைத் தொடங்க 6 கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தி.மு.க. அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர்கல்வி கற்பது தமிழ்நாட்டில் தான். எனவே, மத்திய அரசின் நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்படவுள்ள 100 மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்திற்கு 7 மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.














