இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், வாட்ஸ்அப் பிசினஸ் கணக்குகளில் உரையாடினால், அவற்றிலிருந்து தொல்லை தரும் அழைப்புகள் வருவது அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கருத்து கணிப்பில் பங்கேற்ற மக்களில் 76% பேர் தொல்லை தரும் அழைப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அவற்றில் 41% பேர் தினந்தோறும் அத்தகைய அழைப்புகள் வருவதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை, இந்தியாவில் உள்ள 351 மாவட்டங்களைச் சேர்ந்த 51000 வாட்ஸ்அப் பயனர்கள் இடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், 12215 பயனர்கள், தொல்லை தரும் செய்திகள் மற்றும் அழைப்புகள் வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், 12673 பயனர்கள், இத்தகைய அழைப்புகள் வரும் வாட்ஸ்அப் எண்களை பிளாக் செய்வதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிலர், வாட்ஸ்அப் எண்ணை பிளாக் செய்தாலும் கூட, வேறொரு எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு தொல்லை தரும் அழைப்புகள் வருவதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு புகார் அளிக்கப்படும் வாட்ஸ்அப் எண் முடக்கப்படும் என்று வாட்ஸ் அப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.