ஆந்திராவில் லாரி மீது சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் பலியாகினர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அடுத்த முசனுர் சுங்கச்சாவடி அருகே லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மற்றொரு லாரி நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. அதே நேரத்தில் சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளான லாரியின் மீது மோதியது. இந்த விபத்து இன்று அதிகாலை 2 மணி அளவில் நடைபெற்றது. இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி முழுவதுமாக நொறுங்கியது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். லாரியின் மீது பேருந்து மோதிய போது பயணிகள் கூச்சலிட்டனர். அப்போது அருகில் இருந்தவர்கள் காவாலி காவல்துறைக்கு தகவல் அனுப்பினர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடுப்பாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் லாரி ஓட்டுனர்கள் இரண்டு பேர், பேருந்து ஓட்டுனர், பெண் பயணி உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிகிச்சை பலனின்று இரண்டு பேர் பலியாகினர். எனவே இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. காவாலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற மக்களின் விவரங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.