திரிபுராவில் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல்-மந்திரி மாணிக் சகா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்கு 60 இடங்களை கொண்ட சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி, மார்க்சிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி, மாநிலக்கட்சியான திப்ரா மோதா ஆகியவற்றுக்கு இடையே பலத்த போட்டி நிலவியது. 20 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 259 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பா.ஜ.க. அதிகபட்சமாக 55 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 47 இடங்களிலும், மாநிலக்கட்சியான திப்ரா மோதா கட்சி 42 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. 28.13 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் விறுவிறுப்பாக நடந்தது. ரெய்மா தொகுதியில், வாக்காளர்கள் டும்புர் ஏரியில் படகுகளில் வந்து வாக்குப்பதிவு செய்தனர். பிரதாப்கார் தொகுதியில் மூன்றாம் பாலின வாக்காளர்கள் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.
திரிபுராவில் 4 மணிக்கு வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. 85 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் வட்டார தகவல்கள் கூறுகின்றன. வாக்குப்பதிவு அமோகமாக இருந்ததால், அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2-ந்தேதி நடக்கிறது. அதே நாளில்தான் மேகாலயா, நாகலாந்து மாநில சட்டசபை தேர்தல்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.














