அமெரிக்காவின் ஆளில்லா விண்வெளி விமானம், 908 நாட்கள் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, பூமிக்கு திரும்பி உள்ளது. இதுவரை அதிக நாட்கள் விண்வெளி பயணம் மேற்கொண்டதாக இந்த விமானம் சாதனை படைத்துள்ளது. முன்னதாக, 780 நாட்கள், இதே விமானம் விண்வெளி பயணத்தை மேற்கொண்டு இருந்தது. இந்த சாதனையை முறியடித்து, புதிய வரலாறை படைத்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு, போயிங் நிறுவனத்தின் தயாரிப்பில் எக்ஸ் 37 பி என்ற ஆர்பிட்டல் டெஸ்ட் வெஹிகிள் (OTV) உருவாக்கப்பட்டது. இது பூமியின் சுற்றவட்ட பாதையில் பயணம் செய்யக்கூடிய விண்வெளி விமானம் ஆகும். இது சூரிய சக்தியில் இயங்கக்கூடிய ஆளில்லா விமானம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும். அந்த வகையில், இது தனது ஆறாவது விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் பத்திரமாகத் தரை இறங்கி உள்ளது. இந்த விமானம், இதுவரை, பூமியிலிருந்து 1.3 மில்லியன் மைல்கள் தொலைவு வரை சென்றுள்ளது. மேலும், மொத்தமாக 3774 நாட்கள் விண்வெளி பயணத்தில் ஈடுபட்டுள்ளது.