டாடா குழுமம், டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, டோக்கியோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரெனேசஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் டாடா இணைந்து பணியாற்றி வருகிறது. இந்த நிறுவனம் செமி கண்டக்டர் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசு, 30 பில்லியன் டாலர்களை செமி கண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக் துறையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக சந்திரசேகரன் தெரிவித்தார். எனவே, டாடா குழுமம், எதிர்கால வளர்ச்சித் துறையான மின்சார வாகனத் துறையின் முக்கிய பொருளான செமி கண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில், வரும் 2027 ஆம் ஆண்டில், சாதாரண வாகனங்களை விட மின்சார வாகனங்கள் அதிக புழக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறிய அவர், செமி கண்டக்டர் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.