சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 1,500 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறுகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 3,454 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு கருதி நிர்பயா திட்டத்தின்கீழ் 2,500 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டமிடப்பட்டது.
ஒவ்வொரு பேருந்திலும் தலா 3 கேமரா, அவசர அழைப்பு பொத்தான், வீடியோ ரெக்கார்டர் ஆகியன பொருத்தப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் 15-ம் தேதி, கேமரா பொருத்தப்பட்ட 500 பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
இதன்பிறகு தற்போது வரை மொத்தமாக 1,000 பேருந்துகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,500 பேருந்துகளில் கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக கூடுதலாக தேவைப்படும் அதிநவீன தொழில்நுட்பம்கொண்ட கேமராக்களை வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று மாநகர போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறினர்.











