விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தில், 2024 ஆம் ஆண்டு மனிதர்கள் பயணிக்கலாம் என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
வரும் 2023 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில், இந்த திட்டத்தின் முதல் ஆளில்லா விண்வெளி பயணம் நிகழும் என்றும், 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இரண்டாவது ஆளில்லா விண்வெளிப் பயணம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். அத்துடன், 2024 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல் பயணம் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் அவர் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். சுமார் 10,000 கோடி மதிப்பிலான ககன்யான் திட்டத்தில், மூன்று இந்தியர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, 5 முதல் 7 நாட்கள் வரை விண்வெளிப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.














