வாட்ஸ்அப் பே முன்னாள் தலைவர் வினய் சோலட்டி, டாடா டிஜிட்டலில் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மெட்டா நிறுவனத்தில் இணைந்த நான்கே மாதங்களில், கடந்த வாரம், தனது பதவியை வினய் சோலட்டி ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. அவர் முன்னதாக அமேசான் பே -ல் பணியாற்றியவர் என்பதும் கவனிக்கத்தக்கது.
அதே வேளையில், டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் மூத்த உயர் அதிகாரிகள் சரத் புளுசு மற்றும் பிரதிக் மேத்தா ஆகியோர் வெளியேறி உள்ளனர். இந்நிலையில், வினய் சோலட்டி, டாடா டிஜிட்டல் உயர்பதவியில் இணையலாம் என்று கூறப்படுகிறது. அவர், டாடா குழுமத்தின் நியூ பாஸ் (Neu Pass) மற்றும் டாடா பேமெண்ட் துறைகளில் ஹர்வீர் சிங்குக்கு கீழே பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இணைய வர்த்தகத் துறையில், அமேசான், ஜியோ மார்ட் மற்றும் பிளிப்கார்டுக்கு போட்டியாக, கால் பதித்துள்ள டாடா நியூவின் வளர்ச்சிப் பணியில் வினய் சோலட்டி ஈடுபடுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.














