பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100) குஜராத் மாநிலம், காந்தி நகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. அவர் ஆமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில், ''அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் பிரதமர் மோடி நேரில் வந்து பார்த்து உடல் நலம் விசாரித்தார். இந்நிலையில், மருத்துவமனை சார்பில் இன்று இரண்டாவது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஹீராபென் மோடி குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு என்ன பிரச்சினை என்பது குறித்தோ எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்தோ மருத்துவமனை தரப்பில் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.