ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த, ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரபல குளிர்பான நிறுவனமான சோஸ்யோ ஹஜோரியின் 50% பங்குகளை கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மீதமுள்ள பங்குகளை சோஸ்யோ ஹஜோரி நிறுவனமே கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோஸ்யோ ஹாஜோரி நிறுவனம், 100 வருட பாரம்பரியம் கொண்டது. உள்நாட்டு குளிர்பான சந்தையில் இந்த நிறுவனம் முக்கிய அங்கம் வகிக்கிறது. கடந்த 1923 ஆம் ஆண்டு, அப்பாஸ் அப்துல்ரஹீம் ஹஜோரி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், சோஸ்யோ, காஷ்மிரா, லெமீ, ஜின்லிம், ரன்னர், ஓபன்னர், ஹஜோரி சோடா மற்றும் சீயோ ஆகிய குளிர்பானங்களை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்துடனான இணைப்பு குறித்து, இரு நிறுவனத் தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதன் மூலம், சோஸ்யோ நிறுவனத்தின் குளிர்பானங்கள் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை சென்றடையும் என்று கூறப்படுகிறது.