ட்விட்டர் தளத்தில் இருந்து 20 கோடிக்கும் அதிகமான பயனாளர் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ட்விட்டரை ஹேக் செய்தவர்கள், திருடப்பட்ட பயனாளர் தரவுகளை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தரவின் ஸ்கிரீன் ஷாட் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், விராட் கோலி, வீரேந்திர சேவாக், சல்மான் கான், அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், அனுஷ்கா ஷர்மா போன்ற இந்திய பிரபலங்களின் பெயர்கள் மற்றும் உலக அளவில் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த தகவல் திருட்டில், 20 கோடி பயனாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவை கசிந்துள்ளன. இது குறித்து ட்விட்டர் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், ஹேக்கர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், இத்தகைய தரவு கசிவுகள் பெரும்பாலும் போலியான, பழைய அல்லது நகல் தரவுகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன், எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்துவதற்கு முன்னர் இந்த தரவுகள் திருடப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால், ட்விட்டர் பயனர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.














