உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் போர் தளபதியாக செர்கி சுரோவிகின் பதவி வகித்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர் இந்த பணியில் சேர்ந்தார். இந்நிலையில், அவரது பதவிக்கு வலேரி ஜெராசிமோவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ரஷ்ய இராணுவத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், இவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வலது கையாக செயல்பட்டு வருபவர் எனவும் கூறப்படுகிறது. அத்துடன், உக்ரைனுக்கு எதிரான போரில், திட்டங்களை வகுப்பதில் இவர் முக்கிய பங்காற்றி வருகிறார் எனவும் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதத்தில் சிறப்பு ராணுவ நடவடிக்கையாக சுரோவிகின் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார். மேலும், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், ராணுவத்தின் தலைமை பொறுப்பு அதிகாரிகளின் பதவி மாற்றங்களை அறிவித்துள்ளது. அத்துடன், இந்த பதவி மாற்றங்களில் சர்ச்சைகளுக்கு இடமில்லை எனவும், அனைவரும் இணைந்து ஒரே குழுவாக பணியாற்றி வருவதாகவும் ரஷ்யா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.