பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 106 பேருக்கு பத்ம விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, மருத்துவம், சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டது. இந்தாண்டில் 6 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உபி முன்னாள் முதல்வரான மறைந்த முலாயம் சிங் யாதவ், கர்நாடகா முன்னாள் முதல்வரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஓஆர்எஸ் கரைசலை உருவாக்கிய மேற்கு வங்கத்தை சேர்ந்த மறைந்த மருத்துவ பேராசிரியர் திலீப் மஹாலனாபிசுக்கு (80) பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம், பிரபல தொழிலதிபர் குமார் மங்களம் பிர்லா, இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடிக்கும் இருளர் இனத்தினர் வடிவேல் சாமி மற்றும் மாசி சடையன், கல்யாண சுந்தரம் பிள்ளை, பாலம் கல்யாண சுந்தரம், மருத்துவர் கோல்பால்சாமி வேலுசாமி உள்ளிட்ட 91 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுகளை வரும் மார்ச் அல்லது ஏப்ரலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்குவார்.