ராகுல் காந்தியின் பாதயாத்திரையின் இறுதி கட்டமாக ஸ்ரீநகரில் அவர் தேசியக்கொடி ஏற்றினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் பாத யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். பல்வேறு மாநிலங்களில் பாத யாத்திரை மேற்கொண்ட அவர் இறுதி கட்டமாக தற்போது ஜம்மு-காஷ்மீரில் முகாமிட்டிருக்கிறார். அவர் நேற்று மதியம் 12 மணி அளவில் ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியில் தேசிய கொடியேற்றினார். ராகுலின் பாத யாத்திரை ஸ்ரீநகரில் இன்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. இறுதி நாளில் லால் சவுக் பகுதியில் தேசிய கொடியேற்ற அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் ஒருநாள் முன்கூட்டியே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் அவரது பாத யாத்திரையும் நேற்றோடு நிறைவு பெற்றுவிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதைத்தொடர்ந்து எஸ்.கே. மைதானத்தில் பிரமாண்ட நிறைவு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த நிறைவு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்குமாறு 21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.













