இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா நாடுகளில் ட்விட்டர் ப்ளூ சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், இந்தியாவில், ட்விட்டர் ப்ளூ சேவைக்கான கட்டணம் 650 ரூபாய் முதல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கணினிகளுக்கான ப்ளூ டிக் சேவைக்கு 650 ரூபாயும், கைப்பேசிகளுக்கான ப்ளூ டிக் சேவைக்கு 900 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வருடாந்திர சந்தா கட்டணத்தில், சலுகையாக, மாதத்திற்கு 566.67 ரூபாய் வீதம், 6800 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான பின்னர், ட்விட்டர் ப்ளூ கட்டணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியாவில், நெட்ப்ளிக்ஸ், ஸ்பாட்டிபை, ஆப்பிள் மியூசிக் உள்ளிட்டவைகளுக்கான கட்டணத்தை விட இந்த கட்டணம் உயர்வாக உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த நவம்பர் மாதத்தில் ட்விட்டர் ப்ளூ அறிமுகமானபோது, இந்தியாவில் ஆப்பிள் பயனாளர்களுக்கு 719 ரூபாய்க்கு ப்ளூ டிக் சேவை வழங்கப்பட்டது. இது மிகவும் அதிகமாக கூறப்பட்ட நிலையில், தற்போதைய அறிவிப்பில் கைபேசிகளுக்கான சந்தா கட்டணம் அதைவிட உயர்வாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.