ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியாக, அதானி குழும பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகின்றன. எனவே, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அதானி குழுமத்தின் வருவாய் வளர்ச்சி இலக்கு, தற்போது பாதியாக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய மூலதன செலவு திட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் வருவாய் வளர்ச்சி இலக்கு 40% ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 15 முதல் 20% வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய அளவைவிட கிட்டத்தட்ட பாதி அளவுக்கு கீழ் என்பது குறிப்பிடத்தக்கது. அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் கடந்த சில வாரங்களாக கடும் ஏற்றத்தாழ்வை சந்தித்து வருகிறது. மேலும், முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில், சராசரியாக, அதானி குழும நிறுவனங்கள் 5% வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி ட்ரான்ஸ்மிஷன் ஆகியவை வீழ்ச்சியை சந்தித்துள்ள முக்கிய நிறுவனங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.