இந்திய பங்குச் சந்தையில் கடந்த 4 நாட்களாக தொடர் சரிவுகள் பதிவாகி வருகின்றன. இதனால், முதலீட்டாளர்களுக்கு கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 927.74 புள்ளிகள் சரிந்து, 59744.98 ஆக பதிவானது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 272.4 புள்ளிகள் சரிந்து, 17554.6 ஆக நிலை கொண்டது. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சந்தை நிறுவனங்களின் மொத்த மதிப்பு 261.3 லட்சம் கோடியாக உள்ளது. மேலும், இன்று மட்டுமே 3.9 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், கடந்த 4 நாட்களில், சென்செக்ஸ் குறியீட்டு எண் 1500 புள்ளிகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பங்குச் சந்தையில் நிலவும் கரடியின் ஆதிக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. உலகளாவிய சந்தை நடைமுறை, உலக அரசியல், அமெரிக்க ஃபெடரேஷனின் வட்டி விகித நிர்ணயங்கள், மத்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகித உயர்வு ஆகியவற்றுடன், அதானி குழுமத்தின் பங்குகள் சரிவு பங்குச்சந்தையில் எதிரொலித்து, கரடியின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், அதானி எண்டர்பிரைசஸ் 11.05% இழப்பை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.