கடந்த நவம்பர் மாதத்தில், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் பலரும் நிறுவனத்தை விட்டு வரிசையாக வெளியேறத் தொடங்கினர். ட்விட்டரை பொறுத்தவரை, கிட்டத்தட்ட 90% வருவாய் விளம்பரதாரர்கள் மூலம் கிடைத்து வந்தது. எனவே, தற்போதைய நிலையில், நிறுவனம் மிகப்பெரிய வருவாய் இழப்பை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதலீட்டாளர்களுக்கு அனுப்பப்பட்ட செய்தி அறிக்கையில், டிசம்பர் மாத இறுதியில், நிறுவனத்தின் வருவாயில் 40% சரிவு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் ப்ளூ சேவை கட்டணம் அதிகமாக உள்ளதால் சந்தாதாரர் எண்ணிக்கை பெரும் சரிவை சந்தித்துள்ளது. அதே வேளையில், ட்விட்டர் நிறுவனத்தின் 30 முக்கிய விளம்பரதாரர்களில் 14 பேர் முழுமையாக தங்கள் செயல்பாடுகளை விலக்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 4 விளம்பரதாரர்கள் தங்களது நிதியை வெகுவாக குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ட்விட்டர் நிறுவனத்தின் நிதி நிலையை தீவிரமாக பாதித்துள்ளது.