என்டிடிவி பங்குகளை வாங்குவதில் செபியின் அனுமதி தேவையில்லை என அதானி குழுமம் கூறி உள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன் முன்னணி ஆங்கில செய்தி சேனலான என்டிடிவியின் 29.18 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கியதாகவும், மேலும் 26 சதவீத பங்குகளை வாங்க வெளிப்படையான கோரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த பங்குகளை வாங்குவதன் மூலம் என்டிடிவியை அதானி குழுமம் கைப்பற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
என்டிடிவியின் விளம்பர நிறுவனமான ஆர்ஆர்பிஆர் நிறுவனம் கடந்த 2009-10ம் ஆண்டில் விசிபிஎல் நிறுவனத்திடம் ரூ.403 கோடி கடன் பெற்றது. இதனை திருப்பி தர முடியாததால், ஆர்ஆர்பிஆர் பங்குகள் விசிபிஎல் நிறுவனத்திடம் சென்றது. ஆர்ஆர்பிஆர் நிறுவனம் ஏற்கனவே என்டிடிவியின் 29.18 சதவீத பங்குகளை வைத்திருந்ததால், அந்த பங்குகளும் விசிபிஎல் நிறுவனத்திற்கே சென்றது. இதற்கிடையே, விசிபிஎல் நிறுவனத்தை அதானியின் நிறுவனம் ரூ.113 கோடிக்கு வாங்கியது. இதனால் என்டிடிவி பங்குகள் அதானி குழுமத்தின் வசமாகி உள்ளது.
இந்நிலையில், ஆர்ஆர்பிஆர் பங்குகளை மாற்ற செபியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை என என்டிடிவி நிறுவனம் அதானி குழுமத்திற்கு கடிதம் எழுதியது. இதனை அதானி குழுமம் நிராகரித்துள்ளது.
மேலும், என்டிடிவி நிறுவன பங்குகளை வாங்கவோ, விற்கவோ கூடாது என பிரணாய் ராய், ராதிகா ராய்க்கு செபி கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி உத்தரவிட்டது. இது ஆர்ஆர்பிஆர் நிறுவனத்திற்கு செல்லாது. எனவே, செபியின் அனுமதி தேவையில்லை என அதனை குழுமம் பதில் அளித்துள்ளது














