ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்ற தமிழக சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க பேரவைக்கு அதிகாரமில்லை என்று எந்த சட்டத்தை வைத்து கவர்னர் கூறுகிறார் என்று தெரியவில்லை. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்ற தமிழக சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு கவர்னர் தாமதம் ஏற்படுத்தியதற்கான காரணம் தெரியவில்லை.
ரம்மி என்பது 'ஸ்கில் கேம்' (SKill Game) இல்லை 'கில் கேம்' (Kill Game) என்று நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்க அவருக்கு ஏதோ அழுத்தம் இருக்கிறது. அந்த அழுத்தத்தின் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.