நிதி மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அதானி குழுமம், அதன் நம்பகத்தன்மையை நிரூபிக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், நிறுவனத்தின் மீதான கடன்களை அடைப்பதற்காக, அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகளை விற்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 4-5% பங்குகளை விற்பதன் மூலம், 3700 கோடி ரூபாய் நிதியை திரட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்களிடம் கௌதம் அதானி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வந்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர், கௌதம் அதானி, 'அதானி குழுமம் தனது பங்குகள் மீதான அனைத்து கடன்களையும் அடைத்து விட்டதாக' தெரிவித்தார். குறிப்பாக, முதிர்வு காலத்திற்கு இரு வருடங்களுக்கு முன்பே கடன்கள் அடைக்கப்பட்டதாக கூறினார். இதற்கான நிதியை ஈடுகட்டவே, அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.