ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, நட்சத்திரம் ஒன்று இறக்கும் தருவாயில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. நட்சத்திர இறப்பின் அரிதான கட்டத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால், இது மிகவும் கவனம் பெற்றுள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த ஆரம்ப கால புகைப்படங்களில் ஒன்றான இதை நேற்று நாசா வெளியிட்டுள்ளது.
Wolf Rayet என்று அழைக்கப்படும் கட்டம், நட்சத்திர இறப்பின் போது, நட்சத்திரம் வெடிப்பதற்கு சற்று முன்னால் ஏற்படக்கூடிய கட்டமாக சொல்லப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னர், ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி இந்த Wolf Rayet நட்சத்திர இறப்பு கட்டத்தை புகைப்படம் எடுத்திருந்தது. ஆனால், அதில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்ததைப் போன்று தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.
புகைப்படத்தில் உள்ள நட்சத்திரம் சூரியனை விட 30 மடங்கு பெரியதாக சொல்லப்படுகிறது. மேலும், அது கிட்டத்தட்ட 10 மடங்கு ஆற்றலை தற்போது இழந்திருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த புகைப்படம் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.