எதிர்க்கட்சிகள், பாஜக எம்.பிக்களின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளும் - ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. குறிப்பாக, நேற்று நாடாளுமன்றத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணியாக சென்றனர். மக்களவையும், மாநிலங்களவையும் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
அவை நடவடிக்கை தொடங்கிய உடனேயே அதானி குழும விவகாரம், ராகுல்காந்தி பேச்சு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், எவ்வித அவை நடவடிக்கைகளும் நடைபெறாமல் அலுவல் பணிகள் முடங்கியுள்ளன. எதிர்க்கட்சிகள், பாஜக எம்.பி.க்களின் அமளியால் 4-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் செயல்படாமல் முடங்கியுள்ளது.














