பொதுவாக தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு சமூக ஊடகத் தளங்கள் சில நேரங்களில் முடங்கும். அந்த வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் தளமான சாட் ஜிபிடி, உலகளாவிய முறையில் முடங்கியுள்ளது. கட்டணம் செலுத்திய சந்தாதாரர்களுக்கும் சேவை முடங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், அவர்களின் சாட் ஹிஸ்டரி அணுக முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த நிலை பல மணி நேரங்களுக்கு நீடித்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம், கிட்டத்தட்ட 12 மணி நேரம் வரை சேவைகள் முழுமையாக முடங்கின எனவும், 12 மணி நேரம் கழிந்த பின்னர், முழுமையான சேவைகளைப் பெற முடியாத நிலை உணரப்படுகிறது எனவும் கூறியுள்ளது. எனவே, “சாட் ஹிஸ்டரியை தற்போது அணுக முடியாது. அதனை திருப்பிக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்” என்று ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.