அதிக மின்னழுத்தம் கொண்ட மின்இணைப்புகளில் ஹார்மோனிக் பில்டர் கட்டமைப்பை ஏற்படுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வீடு உள்ளிட்ட அனைத்து மின்இணைப்புகளிலும் மின் பயன்பாட்டின்போது மின்சாரத்தின் ஓட்டமும், மின் அழுத்தத்தின் ஓட்டமும் ஓரே சீராக இருக்க வேண்டும். தற்போது அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நவீன மின் மற்றும் மின்னணு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அப்போது, மின்னழுத்த அளவும், மின்சார ஓட்ட அளவும் சீரற்ற நிலைக்கு மாறி விடுகின்றன. இதனால் ஹார்மோனிக் சிதைவு நிலை ஏற்படுகிறது. இச்சிதைவு ஏற்பட்டால் மின்விநியோகம் பாதிக்கப்படும்.
எனவே, இந்த சிதைவை கட்டுப்படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிகளை வகுத்துள்ளது. இதன்படி, அதிக மின்னழுத்தம் பயன்படுத்தும் மின்நுகர்வோர் அனைவரும் தங்களின் மின்இணைப்புகளில் ஹார்மோனிக் பில்டர் என்ற கட்டமைப்பை இணைக்க வேண்டும். சர்வதேச தர அமைப்பு நிர்ணயித்ததைவிட அதிகளவு ஹார்மோனிக் சிதைவு இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.














